About Sufism
Tamil Unicode Font Help
பிஸ்மில்லாஹ்
அலட்சியம் செய்யப்பட்டுள்ள அற்புத வாழ்வு.
(சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி)
இறை நம்பிக்கையில் மனிதர்கள் ஆத்திகர்கள் நாத்திகர்கள்
என்று இருவேறு கொள்கைகளை உடையவர்களாக இருக்கிறார்கள். ‘இவ்வுலகின் தோற்றத்தையும், இதன் இயக்கத்தையும் திட்டமிட்டு
செயல்படுத்துபவன் இறைவன்’ என்ற நம்பிக்கையை
கொண்டு இருப்பவர்கள் ஆத்திகர்களாகவும்; அதனை இயற்கையான தோன்றுதலாகவும் தானாக இயங்கிக்கொண்டிருப்பதாகவும் எண்ணுபவர்கள்
நாத்திகர்களாகவும் அறியப்படுகிறார்கள்.அலட்சியம் செய்யப்பட்டுள்ள அற்புத வாழ்வு.
(சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி)
எப்படி? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுக்கு ஐம்புல அறிவின் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்துகொண்டு விடைகாண நாத்திகர்கள் முற்படுகிறார்கள். படைப்புகளின் பிரம்மாண்டமான அமைப்புகளுக்கும் நுணக்கமான அவைகளின் இயக்கங்களுக்கும் எப்படி? ஏன்? என்று கேட்கப்பட்டால் அவை அனைத்தும் இயல்பானது - இயற்கையானது என்று வாதிடுகிறார்கள்.
கர்ப்ப அறையில் செலுத்தப்பட்ட விந்தணு இரத்தக்கட்டியாக - சதைக்கட்டியாக மாற்றம் பெற்றுவிடுவது இயற்கையானது என்று வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அதற்குப்பின் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் சதைத்துண்டு போன்று ஒட்டுமொத்த மாற்றமாக ஆகி இருப்பதில்லையே. மனித வாழ்வுக்கு இன்றியமையாத உள், வெளி உறுப்புகளாக அச்சதைத்துண்டு மாற்றம் பெறுவது “எப்படி? அவைகளின் மாறுப்பட்ட இயக்கங்களுக்கு இரத்த நாளங்களின் தொடர்பு இன்றியமையாதது அல்லவா? இதற்கான இணைப்புகள் இவ்வளவு நுணுக்கமாக பிணைக்கப்படுவது “எப்படி”? அவைகள் எவ்வித சிக்கலுமின்றி செம்மையாக செயல்படுவது “எப்படி”? இது ஒருபுறம் இருக்கட்டும்.
மனிதனின் முகத்தில் தோன்றும் உரோமங்களுக்கு ஹார்மோன் சுரப்பிகளே காரணம். அதனை நாம் மறுக்கவில்லை. புருவத்திலும், இமைகளிலும் இந்த ஹார்மோன்கள் தானாக திட்டமிட்டு செயல்பட்டு குறிப்பிட்ட அளவில் உரோமங்களை தோற்றம் பெறச்செய்வது “எப்படி”? தலையில் உள்ள மூளை-கண்-காது-மூக்கு போன்ற பிரதான உறுப்புகள் தனக்கான அமைப்புகளிலும் இடங்களிலும், ஒரு சிறிதும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டுவிடாமல் தோற்றங்களை பெற்றுக்கொண்டுவருவது “எப்படி”?
இவை அனைத்தும் இயற்கையின் விளையாட்டு என்று நாத்திகர்கள் கருதினால், அது அவர்களின் உரிமை. இவ்வனைத்தையும் திட்டமிட்டு உருவாக்குபவனும், இயக்கிக் கொண்டிருப்பவனும் இறைவனே என்று உறுதிபட நம்புகிறவர்கள் ஆத்திகர்கள்.
எப்படி? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத போது ‘இயற்கை’ என்ற இருள் திரைக்குப் பின் பதுங்கிக்கொள்ளும் பரிதாபநிலைக்கு நாத்திகர்கள் தங்களை உள்ளாக்கிக்கொண்டு விட்டிருக்கிறார்கள். இவ்வனைத்தின் இருப்பிற்கும், இயக்கங்களுக்கும் இறைவனே முழுமுதற்காரணம் என்று ஆத்திகர்கள் நம்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டுவிடவில்லை. ஆகவே ‘படைப்பாளன் இன்றி ஒரு பொருள் உருவாக முடியாது’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். அதுபோன்றே ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் இன்றி யாரும் எந்த பொருளையும் உருவாக்க முற்படமாட்டார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் “அல்லாஹூ காலிக்குகுல்லிஷையின்” அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் (39:62) என்பது திருக்குர்ஆனின் அறிவிப்பாகும்.
மண், தண்ணீர், நெருப்பு, காற்று ஆகிய மூலப்பொருட்களும், அதைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல் கரடு - உலோக தாது வர்க்கங்கள், தாவர வர்க்கங்கள், உயிரினங்கள், வானில் சஞ்சரிக்கும் கோளங்கள், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றனவோ - எப்படி அவைகள் இயங்க வேண்டும் - எவ்வாறான பலாபலன்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்துள்ளானோ அவ்வாறே இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பூமியில் உள்ளவை அனைத்தையும் உங்களுக்காவே படைத்திருக்கிறான் என்று அல்லாஹ் அறிவித்துள்ளான் (2:29) இந்த அறிவிப்பின் மூலம் (மனிதர்கள் நீங்கலாக) அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவுபடுத்திவிட்டான். இதே அடிப்படையில்தான் அனைத்துப்பொருட்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித வாழ்க்கைக்குப் பயன்பட்டுக்-கொண்டிருக்கின்றன என்பதும் யதார்த்தமான உண்மையாகும்.
இவ்வளவு பிரமாண்டமான ஏற்பாட்டை மனிதர்களுக்காக செய்து இருக்கும் அல்லாஹ், மனிதர்களின் படைப்பிற்கு பிரத்தியேக நோக்கம் ஒன்றை முன்வைத்தே
அவர்களை படைத்திருக்க வேண்டும் என்பதை மறுக்கமுடியாது. உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது, உலகியல் பொருட்களை தனது விருப்பப்படி ஆண்டு அனுபவிப்பது என்பது மனித படைப்பின் நோக்கமாக இருக்கமுடியாது. ஏனெனில் இவ்வாறான அனுபவிப்புகள் பிற உயிரினங்களின் வாழ்விலும் இடம் பெற்றிருக்கிறது.
மனிதனைப் பொறுத்து சற்று மேம்பாடான முறைகளில் இந்த அனுபவிப்புகளை செய்து கொண்டிருக்கிறான் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் உலகில் உள்ள உயிரினங்கள் உயிர்வாழ இந்த அனுபவிப்புகள், இந்த தொடர்புகள் கட்டாயம் தேவை என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
மனிதர்கள் அவரவர்கள் தங்களின் வாழ்வியல் தொடர்புகளுக்காக ஏதேனும் ஒருதுறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவே செய்கிறார்கள். அந்தத் துறைகளில் வெற்றியையும், இலாபத்தையும் அடைந்து கொள்ள திட்டமிட்டு காலையில் எழுந்தது முதல் இரவு உறக்கத்திற்குச் செல்லும் வரை அதனையே நோக்கமாக்கிக் கொண்டுதான் இயங்குகிறார்கள்; செயல்படவும் செய்கிறார்கள், தங்களின் உழைப்பின் மூலம் பெற்றிடும் வெற்றியையும், வருவாயையும் உயிர்வாழ் உலக சுகத்தின் உச்ச நிலை இன்பத்தை அனுபவிக்கவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். உண்பது உழைப்பதற்காக - உழைப்பது உண்பதற்காக என்று இதுமீண்டும் மறு சுழற்சியாகவே ஆக்கப்பட்டுவிடுகிறது. இது உயிர் வாழ்வதை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இவ்வாறான செயல்பாடுகள் மனித ஜீவிதத்தின் பிரத்தியேக அம்சமாக - குறிக்கோளாக இந்த சுழற்சிமுறை செயல்பாடுகள் அமைந்திருக்கவில்லை என்பதை நிதானமாக யோசித்தால் தெளிவாக விளங்கிக்கொண்டுவிடலாம்.
வானம், பூமி அதற்கு இடையில் உள்ள அனைத்துப் பொருட்களின் இருப்பையும், இயக்கத்தையும் அதனைப் படைத்த அல்லாஹ்வே நிர்ணயித்துள்ளான். அதற்கொப்பவே அவ்வனைத்தும் செயல்படுகின்றன. அதில் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை. சூரியன் சந்திரன் போன்ற கோளங்களின் இயக்கங்கள் ஒரே சீராக இருப்பதால் தான் குறிப்பிட்ட நேரத்தையும், மாதங்களையும், சீதோஷ்ண நிலைகளையும் நம்மால் நிர்ணயிக்கமுடிகிறது. சூரிய சந்திர கிரகணங்களின் நிகழ்வுகள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறவும் முடிகிறது. தாது - தாவர வர்க்கங்களின் பெயர்களை சொன்ன மாத்திரத்தில் அன்று தொட்டு இன்று வரை அதன் இயல்புகள், தோற்றங்கள், நிறங்கள், ருசிகள், வாசனைகள் என அனைத்தும் அந்தப்பெயர்களுடன் சேர்ந்தே உணர முடிவதற்கெல்லாம் ஒரே காரணம் அவைகளை என்ன நோக்கத்திற்காக அல்லாஹ் படைத்திருக்கிறானோ அதில் இம்மி அளவு கூட மாற்றங்களை வெளிப்படுத்தாமல் அவை நின்றிலங்கிக் கொண்டிருக்கின்றன என்பதே ஆகும்.
ஆனால் ஆறறிவை அல்லாஹ்வினால் அருளப் பெற்றுள்ள மனிதன் மட்டும் அவன் தனது வாழ்வின் நோக்கத்தை உலகின் இன்பத்தை உச்சநிலையில் சுவைத்து உயிர் வாழ்வதுதான் என்று அவனே நிர்ணயித்துக்கொள்வதும், அதன்படி வாழ்ந்து மரிப்பதும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? இவனது வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிக்கும் முழு உரிமை படைப்பாளனான அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம். ஆகவே மனித வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி தனது வேதமான திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு இருகோணங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். “அஃப ஹஸிப்தும் அன்னமா கலக்னாக்கும் அபஸா…” என்ன (மனிதர்களாகிய) உங்களை (எவ்வித நோக்கமும் நிர்ணயிக்கப்படாத நிலையில் உலகில் உயிர் வாழ்ந்து இதன் இன்பங்களை சுவைப்பதற்காக) வீணாக நாம் படைத்திருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறீர்களா? இறப்பிற்குப்பின் நம்மிடம் மீளக்கூடிய(வர்கள் என்ற உணர்வு அற்ற) வர்களாக (எண்ணிக் கொண்டு) இருக்கிறீர்களா? (23.115) என்று அறிவுறுத்துகிறான் இதன்மூலம் ஏதோ ஒரு நோக்கத்துடனேயே மனித இனம் படைக்கப்பட்டிருப்பதை சொல்லாமல் சொல்லி அல்லாஹ் எச்சரிக்கிறான்.
மற்றொரு இடத்தில் அந்நோக்கத்தை நேரடியாகவே தெளிவு படுத்தி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறான்.. “வமா கலக்த்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஅபுதூன்..” மனித - ஜின் (இனத்தை) நம்மை இபாதத் செய்வதற்காகவே அன்றி (வேறு எந்த நோக்கத்திற்காகவும்) படைக்கவில்லை. (51.56)
குறிப்பாக மனிதன் இறைவனின் இபாதத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை இந்த இறைமறை வசனத்தின் மூலம் தெளிவாக்கியுள்ளான்.
அரபி இலக்கணப்படி “அபத” என்ற மூன்று எழுத்து இதன் மூலக்கூறாகும். டிக்-ஷ்னரி(அகராதி)யில் ‘களஅ’ - த்ஜல்ல தன்னை தாழ்மைப்படுத்திக்கொள்வது
மற்றும் ‘தாஅ’ அடிபணிவது ஆகிய அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் இபாதத் என்ற பதத்திற்கு ‘இன்கிஸார்’ - ‘இஸ்திஸ்லாம்’ - இறைவனுக்கு முன்னால் தன்னை தாழ்மைபடுத்திக்கொள்வது - தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துக்கொள்வது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது.
எனினும் இபாதத் என்ற பதத்திற்கு, தன்னை இறைவனுக்கு முன்னால் தாழ்மைப்படுத்திக்கொள்வது அவனிடம் சரணாகதியாகி தன்னை ஒப்படைத்து வாழ்வது என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தால்தான் இஸ்லாம் கூறும் இபாதத்தை மேற்கொண்ட “ஆபிதாக” ஒரு மனிதன் ஆக முடியும். இவ்வித இபாதத்தை வாழ்வில் கடைபிடிப்பவனைத்தான் “ஆபித்” என்று குர்ஆன் கூறுகிறது.
“வமன் அஹ்ஸனுதீனன் மிம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வஹூவ முஹ்ஸினுன்”.. ‘அல்லாஹ்விற்காக (அவனது சமூகத்தில்) தன்னை முழுமையாக சரணாகதியாக்கி முஹ்ஸினான நிலையில் (அல்லாஹ்வை பார்ப்பவனைப்போன்று (அல்லது) அவன் நம்மைப் பார்த்துக்கொண்டடிருக்கிறான் என்ற உணர்வு உள்ளவனாக) அவனிடம் தன்னையே சமர்ப்பணம் செய்து (வாழ்ந்து) கொண்டிருப்பவனைக்காண தீனால் மிக்க அழகானவன் யார் இருக்க முடியும்.. (4.125) என்ற அல்லாஹ்வின் அறிவிப்பின் மூலம் இதுவே தீனின் ஒப்பற்ற மிகமிக உயர்நிலை என்பது தெளிவாகிறது. உள்ளத்தால்-உணர்வால் அல்லாஹ்வின் திருச்சமூகத்தில் நெருக்கத்தைப் பெறுவது என்பது, அல்லாஹ்வை அறிவது என்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இந்த உணர்வை பெற்றவரிலிருந்து வெளிப்படும் சொல்லால்- செயலால் ஆன இபாதத் என்னும் வணக்கங்கள் தான் உயிரோட்டமுள்ளதாக ஆகி இருக்கவும் முடியும் என்பது இந்த வசனத்தின் மூலம் அறியப்படும் அரிய கருத்தாகும். இந்த உணர்வைப் பெற பாலமாக அமையப்பெற்றிருப்பதுதான் அல்லாஹ்வைப் பற்றிய இறைஞான அறிவாகும். இந்த அறிவைப்பெற்று இபாதத் செய்வதற்காகவே மனித இனத்தை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பது ஆணித்தரமான கருத்தாகும்.
இக்கருத்தை நாம் நாமாகக் கூறவில்லை, சுல்தானுல் முஃபஸ்ஸிரீன் (குர்ஆனின் வசனங்களுக்கான ஆழிய கருத்துகளை விளக்கிக் கூறுவதில் அரச அந்தஸ்து பெற்றவர்களாக அக்கால ஸஹாபாக்களாலும், பிற்கால அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் ( இல்லாலி யஅபுதூனில் உள்ள) இபாதத் என்ற பதத்திற்கு (இல்லாலி யஅரிஃபூன்) அல்லாஹ்வை அறிவதற்கே என்று பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதுவே மிகமிக பொருத்தமுள்ள,தெள்ளத்தெளிவான பதப்பொருளாகும்.
ஏனெனில் இபாதத் என்பது சொல்லாலும் வெளிப்படும்; செயலாலும் வெளிப்படும். இவ்வாறான இபாதத்தில் அனைத்துப் படைப்பினங்களும் அவையவைகள் தங்களின் நிலையில் இபாதத்தில் ஈடுபட்டு, செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதனை குர்ஆன் உறுதிப்படுத்துகிறது. “இம்மின் ஷைய்இன் இல்லாயுஸப்பிஹூ பிஹம்திஹி…..” பிரபஞ்சத்திலுள்ள படைப்புகளில் அல்லாஹ்வின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் (என்னும் இபாதத்தில் ஈடுபாடு) செய்யாமல் எந்தப்பொருளும் இல்லை. எனினும் அவற்றின் தஸ்பீஹ் (என்னும் சொல்லால் ஆன அந்த தோத்திர இபாதத் முறை)களை நீங்கள் விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறீர்கள் (17:44) அல்லாஹ்வை வானங்களிலும், பூமியிலும் உள்ள (அனைத்தும்)…. அதிலுள்ள ஒவ்வொன்றும் அதனதன் தொழுகையையும், அவைக்களுக்கான தஸ்பீஹையும் திட்டமாக அறிந்து (இபாதத் செய்து) கொண்டிருக்கின்றன. அவை (களின் இவ்வாறான இபாதத்து) களைப்பற்றி அல்லாஹ்(வும்) அறிந்தவனாக இருக்கிறான் (24:41) இதுபோன்ற வசனங்களில் மட்டுமல்ல, படைப்பினங்கள் அனைத்தும் ருகூவு செய்வதாகவும், சஜ்தா செய்வதாகவும் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இவ்வாறான சொல்லால் - செயலால் ஆன அனைத்து (இபாதத்) வணக்கங்களிலும், படைப்பினங்கள் அனைத்தும் ஈடுபாடு கொண்டிருப்பதை அவைகளை படைத்த இறைவனே அறிவித்தப்பின் அதில் ஆட்சேபனை செய்தவற்கு அறவே வாய்ப்பு இல்லை. அப்படியனால் அல்லாஹ்வின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டு வானம் பூமியில் உள்ள அனைத்தையும் ஆள்வதற்கும்; அனுபவிப்பதற்கும், படைக்கப்பட்ட மனிதன் மேலே விவரிக்கப்பட்ட சொல்லால் செயலால் ஆன இதே இபாதத் என்னும் வணக்கத்தில் ஈடுபடுவதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்றால் இதில் மனிதனுக்கான எவ்வித பிரத்தியேக அம்சத்தையும் உணரமுடியவில்லை என்பது பிரத்தியட்சமான நிலையாகும்.
மேலும் ஆதம் (அலை) அவர்களை (அவர்களின் சந்ததிகளான மனிதர்களை) பூமியில் பிரதிநிதி (கலீஃபா) ஆக ஆக்கி படைக்க இருப்பதை மலக்குகளுக்கு முன் அல்லாஹ் கூறியபோது, (செயல்கள் உட்பட) சொல்லால் ஆன வணக்கத்தில் தாங்கள் சதா ஈடுபாடு கொண்டிருப்பதை அல்லாஹ்வின் சமூகத்தில் மலக்குகள் பிரஸ்தாபிக்கவே செய்தார்கள். அவர்களின் அக்கூற்றுக்கு அல்லாஹ் முக்கியத்துவத்தை தரவில்லை. ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்து அஸ்மாக்களின் இல்மை கற்றுத்தந்து, அதன் காரணத்தினால்தான் இம்மாபெரும் உயர்வுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தான். அதுமட்டிலுமல்ல இந்த கல்விஞானம் அளிக்கப்பட்டதையும், அதனை மலக்குகள் கற்றுக்கொள்ளும் இயல்பில் அவர்கள் படைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் நிரூபித்தப்பின், கிலாஃபத் என்னும் பிரதிநிதித்துவம், ஆதம் (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதை மலக்குகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று அல்லாஹ் உத்திரவிட்டிருந்தால், அதுவே மலக்குகளை மறுக்காமல் ஏற்கச் செய்ய போதுமானது. ஆனால், அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்யப்படும் வணக்கங்களிலெல்லாம் உச்ச நிலையை உறுதிபடுத்த, தனக்காக சிரம் தாழ்த்தி பணிந்திடும் ஸஜ்தாவை ஆதம் (அலை) அவர்களுக்கு செய்திடும்படி உத்திரவிட்டான். அதன்படி மலக்குகளும் ஸஜ்தா செய்து, ஆதம் (அலை) அவர்களின் உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டதை செயல்முறையில், வெளிப்படுத்தச் செய்து அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான்.
குர்ஆனின் 2வது அத்யாயம் 30-34 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் இந்த நீண்ட சரித்திரப் பின்னணியில் ஆதம் (அலை) அவர்களின் உயர்வுக்கான முக்கிய கரு, அஸ்மாக்களைப் பற்றிய கல்வி ஞானம் மட்டும்தான் என்பது தெள்ளத்தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆதம் (அலை) அவர்களின் படைப்பின் நோக்கமும், பதவிக்கான தகுதியாம்சமும் இந்த “இல்முல் அஸ்மா” என்பதைக் கொண்டு மட்டுமே வட்டமிடச்செய்யப்பட்டுள்ளது. மேலும் நூர் என்னும் ஒளியால் படைக்கப்பட்ட உயரிய படைப்பான மலக்குகளுக்கே ‘இல்முல் அஸ்மா’ அளிக்கப்படவில்லை எனும் போது, அதற்குக் கீழ்நிலையில் உள்ள பிற படைப்புகள் எதற்குமே இந்த சிறப்பு கொடுக்கப்பட வாய்ப்பே இல்லை. ஆகவே ஆதிப்பிதா ஆதம் (அலை) அவர்கள் முதலாக உலகம் அழியும் அந்திய காலத்தில் பிறக்க இருக்கும் அவர்களின் வழித்தோன்றலின் கடைசி மனிதன் வரையுள்ள மனிதப்படைப்பின் மாண்பிற்கும், அதனை அளிக்க அல்லாஹ் மனிதர்களை தேர்வு செய்ததற்கும் இந்த ‘இல்முல் அஸ்மா’ என்னும் இறைஞானம் தான் முழுமுதற்காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே இல்மைக்கொண்டு மட்டுமே உயர்வாக்கப்பட்டுள்ள மனிதனிடம், அந்த இல்மைக்கொண்டு தொடர்புள்ள இறைவணக்க இபாதத் மட்டுமே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்க முடியும். இவ்வாறான இல்மைக்கொண்டு தொடர்புள்ள இபாதத்தில், பிற எந்தப்படைப்பும் தங்களை பங்காளியாக ஆக்கிக்கொண்டுவிடவும் வாய்ப்பில்லை. இதுவே மனித இனத்தின் (SPECIALITY) பிரத்தியேக அம்சமாகும்.
இந்த யதார்த்தத்தை முன்வைத்தே மனித இனத்தை (ஜின் வர்க்கத்தை) தன்னை இபாதத் செய்வதற்கே அன்றி படைக்கவில்லை என்ற திருமறை வசன அறிவிப்புக்கு சொல்லால் செயலால் ஆன வணக்கம் என்ற பொருள் மட்டும் பொறுத்தமானதல்ல. மாறாக அல்லாஹ்வை (அவனது அஸ்மாக்களை) அறிந்து, உள்ளத்தாலும் உணர்வாலும் அல்லாஹ்விடம் சரணாகதியாகி, தன்னை அவன் சமூகம் ஒப்படைத்து, வணங்கி வாழ்வதற்காகவே மனிதர்களை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்ற பொருளே மிக மிக பொறுத்தமான கருத்தாக இருக்க முடியும்.
இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனித வாழ்க்கையின் நோக்கம் என்னவெனில் அல்லாஹ்வை (அவனது அஸ்மாக்களை) அவன் தொடர்பிலான ஞானத்தை அறிவதும், அறிந்துணர்ந்தபடி உணர்வுபூர்த்தியாக தன்னை அவன் சமூகத்தில் அர்ப்பணித்து, அல்லாஹ்விற்கு இபாதத் செய்வதும் என்பதே ஆகும். சுருக்கமாக சொல்வதென்றால், மனித வாழ்க்கையின் நோக்கம் அல்லாஹ்வை அறிவதும், அல்லாஹ்வை (இபாதத்) வணங்குவதும் என்ற இரு கோட்பாடுகளைக் கொண்டே நிர்ணயம் பெற்றுள்ளது. இதற்கு நமது தரீக்கத்தின் முன்னோடிகளான ஷேக்மார்கள், ஃபார்சி மொழியில் இரு பதங்களைப் பயன்படுத்துகிறார்கள்; இபாதத் - ஷனாக்த் (வணங்குதல் - அறிதல்).
ஆகவே மனிதர்களைப் படைத்ததற்கான இறைவனின் நோக்கம் இதுதான் என்று தெளிவாக விளங்கிக்கொண்டு விட்டபின் அதற்கேற்ப அல்லாஹ்வை அறிந்து வணங்கி வாழ்வதன் மூலமே மனிதர்களின் வாழ்வு புனிதம் பெற்றதாக ஆக முடியும். அற்புத வாழ்வாக அமையவும் முடியும்.
Home / About Islam / About Sufism / Articles / Audio Bayan / Video Bayan / My Beloved Sheikh / Contact us / Live Program / Useful Links