ABOUT ISLAM...
Tamil Unicode Font Help(சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி ஹளரத் கிப்லா)
இப்பூவுலகில் வாழ்வதற்கான வாய்ப்பை அனைத்து உயிரினங்களும் பெற்றுள்ளன. அவைகளில் ஒவ்வொன்றும் அது அதற்குறிய இயல்புகளைச்சார்ந்த அமைப்பு முறைகளிலேயே வாழ்கின்றன. இவ்வாறான இயல்புகளை முன்வைத்தே அவைகள் அடையாளமும் காணப்படுகின்றன. இந்நிலை மனிதனுக்கும் பொருந்தும். எனினும் மனிதவாழ்வு என்பது அவனது இயல்புகளையும் தாண்டி சிலவரையரை நியதிகளைக் கொண்டு பண்படுத்தப்பட்ட பின்பே முழுமையான மனிதனாக அவன் கணிக்கப்படுகிறான் மதிக்கவும்படுகிறான். அந்நியதிகளின் மறுபெயரே மனிதனின் வாழ்வியல் நெறிமுறைகளாகும். பண்புகள் என்பது மனிதனின் வாழ்வை உயரிய மனிதத்துவம் என்ற ஆபரணங்களைக் கொண்டு அழகு படுத்தப்பயன்படும் குணநலன்களாகும். பிற உயிரினங்கள் இதில் பங்கு பெற வாய்ப்பில்லை மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமாக்கப்பட்டுள்ள இன் நற்குணங்களே மனிதப்பண்புகள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக நன்றி உணர்வு என்பதும் நல்ல பண்பே ஆகும். இது நாய் போன்ற சில உயிரினங்களில் காணப்படுகிறது. எனினும் நன்றியுணர்வு அதன் இயற்கையான இயல்பாகவே கணிக்கப்படுகிறது. ஏனெனில் நன்றி உணர்வில்லாதது என்று எந்த நாயையும் அடையாளம் காணப்படுவதற்கு வாய்ப்பில்லை.
உணர்வால் - சொல்லால் - செயலால் - பரிமாற்றங்களால் பிறருக்கு தீங்கை ஏற்படுத்தாத நிலையையும் கடந்து பிறருக்கு மதிப்பையும் மகிழ்வையும் பலனையும் வெளிப்படுத்தும் பரிமாற்றங்கள் அனைத்தும் நற்பண்புகளாகவே கருதப்படும். இந்நற்பண்புகள் தன் நிலையில் பல படித்தரங்களை உடையவைகளாக அமையப்பெற்றிருக்கிறன.
உலகில் மனிதர்களால் கடைபிடிக்கப்பட்டுவரும் மார்க்கங்கள் மனித வாழ்வு புனிதப்பண்புகளால் அலங்கரிக்கப்பட பல்வேறு உபதேசங்களையும், நெறிமுறைகளையும் கூறுகின்றன. இவை சிறந்த நல்லொழுக்கப் பண்புகள் என்ற எல்லையுடன் நிற்கின்றன. ஆனால் இஸ்லாம் இயம்பும் நல்லொழுக்கங்கள் அனைத்தும், நற்குணங்கள் என்ற பட்டியலின் உச்சத்தையே தொட்டு நிற்கும் உயரிய பண்புகளாக ஏற்றம் பெற்றிருக்கின்றன.
ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களின் மூலம் உலகில் துவக்கமாக அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்னும் பூர்வீக மார்க்கத்தின் முழுமை முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மூலம் நிறைவாக்கப்பட்டது. இந்த இறை மார்க்க போதனைகளை நபி(ஸல்) அவர்களின் மூலம் இறுதி நாள்வரை இவ்வுலகில் வாழ இருக்கும் மனித குலத்திற்கு அல்லாஹ் அருளச்செய்துள்ளான். “குர்ஆன்” என்னும் இப்புனிதவேதம் மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் முழுமையான வழிகாட்டல்களை சிறப்பாக செய்கிறது. அதனை நபி(ஸல்) அவர்கள் தமது சொற்களால் விளக்கி, செயல்களால் நடைமுறைப்படுத்திக் காண்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தாம் மேற்கொண்ட இம்மார்க்கப் பணிகளின் ஒட்டு மொத்த சாராம்சநோக்கம் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்.
“இன்னமா புயிஸ்த்து லிஉதம்மிம மகாரிமல் அக்லாக்” நான் உயரிய நற்குணப்பண்புகளை நிறைவுப்படுத்(தி மக்களுக்கு அறிமுகப்படுத்)தவே (நபியாக) அனுப்பப்பட்டுள்ளேன் என்று ஒரே வார்த்தையில் சுருக்கிக்கூறிவிட்டார்கள். இதன் மூலம் இஸ்லாம் மார்க்கம் முழுவதும், அதன் போதனைகள் அனைத்தும் மனிதனை புனிதனாக்கிடும் உயர்பண்புகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பு என்பது தெளிவாக்கப் படுகிறது. இன்நற்பண்புகளையே நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உபதேசித்து வந்தார்கள். இதனை முன்வைத்து போதனை செய்வது தான் தமது நபித்துவப்பணி என்பதை. “இன்னமா புயிஸ்த்து முஅல்லிமா” (மனிதப்பண்புகளான நற்குணங்களை) போதிக்கக்கூடிய (இறைத்தூது)வராகவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் மற்றொரு அறிவிப்பின்மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.
நற்குணங்கள் பெரும்பாலும் இல்லற வாழ்வில் தான் அதிகபட்சமாக வெளிப்படும். ஏனெனில் இயல்புகளின் உண்மைநிலைகளும் அவை வெளிப்படுவதற்கான வாய்ப்பு, சூழ்நிலைகளும் அங்குதான் அதிகம். அதனால்தான் உங்களில் சிறந்தவர் தங்கள் இல்லத்தாரிடம் (நற்பண்புடன் நடந்து கொள்ளும்) நல்லவர்களே. நான் எனது இல்லத்தாரிடம் நல்ல (குணத்த)வராக (நடந்து கொள்பவராக) இருக்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர்களின் மறைவுக்குப் பின், அண்ணலாரின் நற்குணம் எவ்வாறு அமையப்பெற்றிருந்தது? என்று அவர்களின் அன்பு மனைவியார் ஆயிஷா(ரலி) அம்மையாரிடம் வினவப்பட்டபோது “கான குல்குஹுல் குர்ஆன்” அவர்களின் நற்குணங்கள் அனைத்தும் குர்ஆனாகவே ஆகி இருந்தது! என்று சுருக்கமாக பதிலளித்தார்கள்.
இஸ்லாமின் உயரிய பண்புகளை போதிக்க இறைவனால் இறக்கிவைக்கப்பட்ட வேத நூலாக குர்ஆன் ஆகி இருக்கிறதென்றால் அதனை (IDEAL) முன்மாதிரியான வாழ்வியலாக மனித குலத்திற்கு செயல் வடிவத்தில் சமர்ப்பிக்கும் பணியை நிறைவாக்கி வாழ்ந்து காட்டியவர்கள் நபிகள் கோமான்(ஸல்) அவர்களாகும். குர்ஆன் கூறும் குணநலன்களை முழுமையாக பின்பற்றி நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்ததால் “வ இன்னக்க லஅலா குலுக்கின் அளீம்” (நபியே) நீங்கள் மகத்தான நற்குணங்களின்(வழிமுறைகளை செயல்படுத்தி அதன்)மீதே (உங்களின் முழுவாழ்க்கையையும் ஆக்கிக்கொண்டு) இருக்கிறீர்கள் என்று குர்ஆனை இறக்கிவைத்த அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களைப்புகழ்கிறான்(68:4) அத்துடன் தனது திருத்தூதரின் நற்குணவாழ்வைப்பின் பற்றியே மனிதகுலம் இவ்வுலகின் இருதி நாள்வரைவாழ வேண்டும் என்பதை ஆர்வமூட்டும் வகையில் “லகத்கான லக்கும் ஃபீ ரஸுலில்லாஹி உஸ்வத்துன் ஹஸன...” (நமது) திருத்தூதுவரி(ன் வாழ்க்கையி)லே உங்களுக்கு அழகிய(சிறப்பிற்குறிய)முன்மாதிரி(யான வாழ்வியல் வழிகாட்டல்கள் அமையப்பெற்று) இருக்கின்றன. யாருக்கென்றால் அல்லாஹ்வையும், (அவனது திருபொறுத்தத்தையும், நீடித்த அழிவில்லாத) மறுமைவாழ்நாளினை(அதன் சிறப்பான வாழ்க்கையை) ஆதரவுவைப்பவர்களுக்கும், அல்லாஹ்வை அதிகமாக “திக்ர்” என்னும் தியானத்தை(நினைவில் நிறுத்திக்கொண்டு வாழ)விரும்புபவர்களுக்கும் (நபி(ஸல்)அவர்களில் அழகிய முன் மாதிரியான வழிகாட்டல்கள் அமையப்பெற்றிருக்கின்றன(33:21)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறைமறையின் இரண்டு அறிவிப்புக்களையும் முன்வைத்து ஒட்டு மொத்தமாக மனிதவாழ்வில் இடம்பெற வேண்டிய அனைத்து வகையான நற்குணங்களையும் இஸ்லாம் குர்ஆனின் மூலம் அறிவித்தும் இருக்கிறது. அதனை இறை தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலம் செயல்படுத்தியும் உலக மக்கள் முன்புதெளிவுபடுத்தியும் இருக்கிறது. இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள இறை அறிவிப்பில் நற்குணங்களை நிறைவாகப்பெற்று மனிதப்புனிதனாக வாழவிரும்புவர்களுக்கு தனது நபியின் வாழ்வில் எடுத்துக்காட்டான மூன்று அழகியமுன்மாதிரிகள் அமையப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுக்கூறுகிறான். ஆகிய இம்மூன்றுநிலைகளும் மனித வாழ்வில் இடம் பெற்றுவிட்டால், இவ்வுணர்வுகள் அவனது உலகியல் வாழ்வை நற்குணங்களால் அலங்கரிக்கச்செய்துவிடும் என்பது இறைவனின் அறிவிப்பாகும். ஆகவே இம்மூன்றுபிரிவுகளைப்பற்றிய விரிவாக்கங்களும் விளக்கங்களும் தான் இஸ்லாமின் அறிமுகத்திற்கு அடிப்படையாகத்திகழ்கின்றன.
இம்மூன்றில் முதலாவது இறைவனை நாடுவது என்பதாகும். நாம் ஒருவரை நாடுவதற்கு அவரைப்பற்றி அறிவது அவசியம். இஸ்லாம் இயம்பும் இறைவனும், இறைகொள்கையும் பிறமதங்கள் கற்பிக்கும் இறைவன் – இறைகொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். இதனை இரண்டு பிரிவுகளாக இஸ்லாம் அறிவிக்கிறது. முதல்பிரிவு அல்லாஹ்வான இறைவனின் உள்ளமையைப்பற்றியது. மற்றொன்று அவனது தன்மைகளைப்பற்றிய பிரிவு.
“அல்லாஹ்” என்ற இயற்பெயரைக்கொண்டு இறைவனை இஸ்லாம் நினைவு கூருகிறது. இந்த பெயரிலேயே அற்புதபிணைப்பு அமைந்திருக்கிறது. அரபி உச்சரிப்பில் ஐந்து எழுத்துக்களையும் எழுத்தில் நான்கு எழுத்துக்களையும் கொண்ட இந்த வார்த்தையில் “அலிஃப்” என்னும் முதல் எழுத்தும் இடையில் “லாம்” என்னும் எழுத்து இரண்டும், இருதியில் “ஹு” என்னும் ஒரு எழுத்தும் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு எழுத்துக்களில் எந்த எழுத்தை நீக்கிவிட்டாலும் மீதமுள்ள எழுத்து பொருள் நிறைந்த பதமாகவே மிஞ்சிநிற்கும்.
உதாரணமாக முதல் எழுத்து “அ” என்னும் அலிஃபை நீக்கி விட்டால் மீதமுள்ள மூன்று எழுத்தும் சேர்ந்து லில்லாஹ் “அல்லாஹ்வுக்கு” என்ற அர்த்தம் தரும் பதமாக பொருள் கூறிநிற்கும். மீதமுள்ள அம்மூன்று எழுத்துக்களில் இரண்டு “லாம்”மும் ஒரு ஹுவும் இடம் பெற்றிருக்கிறது. அதில் முதலில் உள்ள “லா” வைநீக்கிவிட்டால் மீஞ்சுவது ஒரு“லா”மும் கடைசியில் உள்ள “ஹு”வும் சேர்ந்து “லஹு” என்ற பதமாகி காட்சி அளிக்கும் இந்த இரண்டு எழுத்தின் கூட்டும் “அவனுக்கே (அனைத்தும்) சொந்தம்” என்ற பொருளை வழங்கும். இவ்விரண்டின் முதல் எழுத்தான (இரண்டாவது) “லா” வையும் அகற்றிவிட்டால் “ஹு” என்று ஒற்றை எழுத்தாக தனித்து நிற்கும். எனினும் “ஹு” என்ற எழுத்தும் கூட “அவன்” என்று அந்த ஏக இறைவனையே சுட்டிக்காட்டி அவன் தனித்தவன் என்றும் அதுபறைசாற்றி நிற்கும். இவை அல்லாஹ் என்ற அவனது பெயரிலேயே பொதிந்துள்ள அதிசயிக்கத்தக்கதும் பிரத்தியேகத் தனித்துவங்களுக்குறியதுமான அற்புத எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.
மேலே விவரிக்கப்பட்ட வரையரைகளை முன்வைத்து அல்லாஹ்வை எப்படித்தான் அறிவது என்ற மலைப்போன்ற கோள்விக்கு இஸ்லாம் அறுமையான பதிலையும் வழிகாட்டலையும் செய்கிறது. ஏனெனில் அல்லாஹ்வை கண்ணாலும் காணமுடியாது. காதாலும் அவன் சொல் கேட்க்கமுடியாது. பிறஐம்புல உணர்வுகளாலும் அவனை அடையாளம் காணமுடியாத போது இஸ்லாம் முன் நிலைப்படுத்தும் இறைவனான அல்லாஹ்வை கற்பனையாகத்தான் கருதவேண்டுமோ என்று எண்ணிவிட வேண்டியதில்லை. அல்லாஹ்வின் இருப்புக்கும் அவனை கண்ணால் கண்டால் எந்த உறுதிப்பாட்டை மனித உள்ளம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அதன் உச்சநிலைக்கு தேவையான அறிவுபூர்த்தியான வழி காட்டல்களைக் குர்ஆன் செய்கிறது. அதன்மகத்தான தெளிவுகளை முஹம்மது(ஸல்) அவர்கள் சிறப்பாக விளக்கியும் இருக்கிறார்கள்.
1. அல்லாஹ்வின் திருபொறுத்தத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற வேட்க்கை நிறைந்த வாழ்க்கை.
2. மறுமைநாளின்மேம்பட்ட வாழ்வை நோக்கமாக கொண்ட உலகியல் வாழ்வு.
3. இறைவனை மறக்காத உணர்வு உள்ளத்திலும், உதட்டிலும் மேலோங்கி இருப்பது.
இஸ்லாம் கூறும் இறைவனின் இயற்பெயரான “அல்லாஹ்” என்ற பதத்தில் பொதிந்துள்ள நுணுக்கங்களையும் அதன் பெருமைகளையும் அறிந்தோம். அது போன்றே அப்பெயருக்குறியவனின் மாண்பும் மட்டிலடங்காததாக ஆகியுள்ளது. அதன் முதற்படி அவனது உள்ளமையை அறிவதைக்கொண்டு துவங்குகிறது. “உள்ளமை”க்கு ஒரு உதாரணம் கூறலாம். “ஜைத்” என்ற ஒரு மனிதரின் பெயரைக்கூறியவுடன் அப்பெயருக்குறிய மனிதரை மட்டுமே நாம் நமது அறிவால் உணர்கிறோம். பிறமனிதர்களிலிருந்து பிரித்து அவரை மட்டுமே நாம் குறிப்பாக்குவதற்காக அப்பெயரை பயன்படுத்துகிறோம். ஆகவே “ஜைத்” என்ற பெயர் யாரைச் சுட்டுகிறதோ அதற்குத்தான் “உள்ளமை” என்னும் பதம் கூறப்படுகிறது. (அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக்கூறி விளக்கிட முடியாது. ஏனெனில் அவனுக்கு உதாரணப்படுத்திக்காட்டத்தக்கதாக எதுவுமே உலகில் இல்லை ஆகவே குறைகளுள்ள உலகபடைப்புகளை முன்னிலைப்படுத்தியே விளக்கிட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. தவிற்கமுடியாத இந்த இயலாமைக்கிடையில் விளக்கிடவும் மிகுந்த எச்சரிக்கையுடன் விளங்கிடவும் முடிந்தவரை முயலுவோம்.) ஒன்றின் பெயரும் அதற்கே உரியசிறப்பம்சங்களும் எதைச்சென்றடையுமோ அதற்கு அரபி மொழியில் “ஜாத்” என்று கூறப்படுகிறது. தமிழ் உலகின் இறை ஞானப்பேரறிவாளர்கள் அதற்கு “உள்ளமை” என்று குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் உள்ளமை பற்றியபிரிவு இஸ்லாமின் இறைக்கொள்கையின் அஸ்திவாரமாகவும், ஆணிவேராகவும் ஆகி இருக்கிறது. உலகிலுள்ள அனைத்து பொருட்க்களுக்கும் ஒரு துவக்கமும், தோற்றுவாயும் இருக்கிறது. அதுபோன்றே அதற்கான காரணங்களும் காரகர்த்தர்களின் பிணைப்பும் இருக்கவே செய்கிறது. மேலே விவரிக்கப்பட்டவை எதுவும் அல்லாஹ்வுக்கு பொருந்தாது.
1. அல்லாஹ் ஆரம்பம் என்றில்லாத ஆதியானவன். அதுபோன்றே முடிவு என்பதும் அவனுக்கு இல்லை.
2. பெற்றோரைக் கொண்டு பிறந்தவனுமல்ல. பிள்ளைகள் என்ற வழிதோன்றல்களும் இல்லை. உலகப்பொருட்களின் தோற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் மண்-தண்ணீர்-நெறுப்பு-காற்று போன்ற மூலப்பொருட்க்களின் படைப்பாளன் அவனே.
3. ஆனால் அவன் அவைகளினால் உருவானவன் அல்ல.
4. நிழல்தோற்றமோ, உருவஅமைப்போ அவனுக்கு இல்லை.
5. ஜடப்பொருளாகவோ – மென்மையான நிலைகளைக் கொண்டோ உணரப்படுபவனாக அவன் ஆகி இருக்கவில்லை.
6. உள்ளத்தால் கற்பனையாகக் கூட உருவகப்படுத்தப்படமுடியாதவன்.
7. வெளிப்புற தோற்றத்தின் மூலமோ உருவ அமைப்பைக்கொண்டோ அடையாளப்படுத்தப்பட முடியாதவன்.
to be continued....
மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
http://humanlifesecretthisworld.blogspot.in/